Sunday, July 4, 2010

கோவை செம்மொழி மாநாடு - வெளிநாட்டவர் கருத்து.

தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!


கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.


எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம்.

உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி):
"நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் தமிழில் உண்டு. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே தமிழோடு இணைந்து குழந்தைகள் நடந்தால், அவர்களும்வளர்வார்கள், தமிழும் தானாக வளரும். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரும், ரெயின் ரெயின் கோ அவே-வும் இத்தனை ஆண்டுகளாக நமக்கு எதைச் சாதித்துத் தந்துவிட்டன? தமிழைஅழித்ததைத் தவிர!"

சைமன் (நெதர்லாந்து):
"ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்குமுக்கியமானது. தமிழர்களைச் சென்றடைய வேண்டிய செய்திகளைச் செந்தமிழில் இல்லாவிட்டாலும் நடைமுறைத் தமிழிலாவது தர வேண்டும். இங்கு ஆங்கில ஆதிக்கம் நிரம்பி வழிகிறது. எனவே, இனி வரும் காலங்களில் இனிய தமிழோடு மக்களைச் சந்திக்கலாமே!"

டிட்மிடா (ஜெர்மனி):
"தமிழகப் பள்ளிகளில் கட்டாயத் தமிழ்க் கல்வி வந்துள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டிலேயே தமிழில் படிப்பதைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை வந்தது வெட்கக்கேடு. இருந்தாலும் பரவாயில்லை. இன்று ஆரம்பித்திருக்கும் இந்த கல்விப் பயணம் எந்த ஒரு அரசியல் மாற்றத்தினாலும் மாறக் கூடாது. சில நேரங்களில் உணவைக் குழந்தைகளுக்குத் திணித்து ஊட்டுகிறோமே, அது போலத்தான் இதுவும். நாள்பட நாள்பட இந்த உணவு பிடித்துப்போகும்!"

தாமஸ் லேமன் (ஜெர்மனி):
"ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்ற இழிநிலை இன்றைய இளவட்டங்களின் மனதில் புதைந்து இருக்கிறது. மிக மோசமான கிருமி இது. வணக்கம், மிக்க நன்றி என்கிற வார்த்தைகளில் இல்லாத மரியாதையும் உவகையுமா ஆங்கில மொழியில் இருக்கிறது. உன் தாயோடும் தந்தையோடும் கதைக்கையில் ஆங்கிலம் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களைத் தமிழ்ப்படுத்துங்கள். அதாவது, தமிழிலேயே கதையுங்கள். ஒவ்வொரு நாளும் தமிழோடு வாழ்வோம், தமிழனாய் வாழ்வோம்!"

கலையரசி (சீனா):
"இதுபோன்ற ஒரு மாநாட்டு வேளையில் தமிழை ஞாபகம்கொள்கிறீர்கள். பிறகு, மறந்து போவீர்கள்தானே? இங்கேயே பார்த்துவிட்டேன் என்னோடு தெளிவான தமிழில் பேசுகையில் பல பெண்களுக்குச் சிரிப்பும் வெட்கமும் வருகிறது. ஏன் இந்தத் தயக்கம்? நியாயப்படி எனக்குத்தான் சிரிப்பு வர வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் பெண்களும், ஆண்களும் நித்தம் நித்தம் தமிழ்க் கொலை புரிதலைச் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் அந்த சிதைக்கப்பட்ட தமிழ்தானே மனதில் பதியும். ஆகவே, ஆரோக்கியமான தமிழ் வாழும் இடமாக உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். நான் சீன இனத்தைச் சேர்ந்தவள். தமிழ்மீதுகொண்ட காதலால்தான் என் பெயரை கலையரசி என்று மாற்றியுள்ளேன். எவ்வளவு இனிமையான பெயர்!

பிருந்தா பெக் (கனடா):
"சமுதாயத்துக்கு எந்த ஓர் உணர்வையும் அழுந்த ஊட்டுவதில் ஈடு இணை இல்லாத வலிமை, கலை மற்றும் இலக்கியத்தின் வசம்தான் இருக்கிறது. பட்டிதொட்டியில் ஆரம்பித்து நவநாகரிக நகரம் வரை தமிழ் மொழியின் நங்கூரத்தை அழுத்திப் பாய்ச்ச நல்ல தமிழில் நயமான இலக்கியங்கள் தேவை. காலத்துக்கு ஏற்றபடி புதுவித இலக்கிய வடிவங்கள் உடனடியாகத் தமிழில் வேண்டும். அவை சுவையுடன் இருத்தல் அவசியம்."

அஸ்கோ பர்போலா (பின்லாந்து):
"பல மொழிகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற கருத்துரு ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. இதற்கு தமிழும் தப்பவில்லை. உலகமயமாக்கலுக்கு இயைந்து நடந்தால்தான் நாமும் வளர முடியும், வல்லரசாக முடியும் என்றொரு மாயையைப் பரப்பி வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் மொழியைக் காவு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 'உலகமயமாக்கல் போக்கினாலேயே ஆங்கிலத்தின் பின் நடக்கிறேன். அப்போதுதான் இந்த உலகில் நானும் பிழைக்க முடியும்' என்பது வெற்று உளறல். தாய்மொழியிலேயே கற்று இன்று எல்லா நிலைகளிலும் தலைநிமிர்ந்து நிற்கும் நாடுகளாக ஜப்பானும் சீனாவும் இல்லையா. எனவே, எந்தச் சூழலுக்காகவும் மொழியைப் பலியிடாதீர்கள். அது நம் சந்ததியை நரபலி இடுவதற்குச் சமம்!"

அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா):
"உங்கள் மொழியைப் படிக்க ரஷ்ய நாட்டில் எத்தனையோ பேர் ஆர்வமாக வருகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும்... பணம் கிடைக்கும் என்று அவர்கள் வரவில்லை. தமிழ் மொழியைப் படித்தால் சுவையாக இருக்கிறது, அதன் அனைத்துப் பாடல்களும் மனிதாபிமானம் பேசுகின்றன, மனிதத் தன்மையை உணர்த்துகின்றன என்பதால்தான் அதைப் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆர்வத்துடன் தமிழ் கற்க வந்த மாணவி ஆனாவுடன்தான் நான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். ஆளுக்கு ஓர் இலக்கியத்தை முதலில் தேர்ந்தெடுத்துப் படித்துப் பாருங்கள். அதன் பிறகு உங்களால் தமிழில் இருந்து மீள முடியாது. வேலைக்காக, பணத்துக்காக இல்லாமல் இலக்கியம் படியுங்கள்!"

கிரிகோரி ஜேம்ஸ் (பிரிட்டன்):
"இதுபோன்ற மாநாடுகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ நடத்தினால் மட்டும் போதாது. தமிழ் ஆய்வு மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மட்டுமே மக்களிடம் மொழி சார்ந்த ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். இவையே மொழிக்கு உந்து சக்தியாக அமையும். இதுபோன்ற நிகழ்வுகள் வெறும் விளம்பரங்களாக இல்லாமல், ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளை அடிப்படையாகக்கொண்டு இருக்க வேண்டும்!"

ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா):
"நான் முதலில் வடமொழியைக் கற்றவன். அதன் பிறகுதான் தமிழைப் படித்தவன். உங்களது மொழியில் அனைத்துத் தன்மைகளுமே இருக்கின்றன. இப்படி ஒரு வளம் வேறு எந்த மொழிக்கும் இல்லை. இந்திய அரசு எழுதிக் கேட்டபோது, தமிழைச் செம்மொழியாக ஏன் ஆக்க வேண்டும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் எழுதி அனுப்பியவன் நான். இது போன்ற வரலாற்றையும், மொழி வளத்தின் தன்மையையும் மற்ற நாடுகளில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. எப்படிப்பட்ட வரலாற்றுக்கு, வளத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று நீங்கள் மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தால் போதாது. அதை உலகமும் ஒப்புக்கொள்ளும் வகையில் கொண்டுசேர்க்க வேண்டும். அதைச் செய்தால் தமிழகத்துக்கு வெளியில் இருந்து எங்களைப் போன்ற ஆர்வலர்கள் தமிழ்த் தொண்டு ஆற்றக் கிளம்பி வருவார்கள்!"

தகவல்: விகடன்.காம்


கோவை செம்மொழி மாநாடு.



செம்மொழி மாநாடு: ரெ.கா. அனுபவமும் பார்வையும்

பாகம் 1:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது என் வாழ்வின் ஒரு பேறு என்றே சொல்லுவேன். என் வாழ்வில் நான் ஏராளமான மாநாடுகளில் பங்கு பெற்றிருக்கிறேன். அவற்றில் பல நான் பயின்ற, பயிற்றுவித்த ஊடகத் துறை சார்ந்த அனைத்துலக மாநாடுகள். இன்னும் பல தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த மாநாடுகள். முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சிமாநாட்டில் ஒரு மாணவனாக இருந்து எடுபிடி வேலைகளும் பார்த்திருக்கிறேன். பின்னர் தஞ்சாவூர் மாநாட்டில் பிரமுகராகவும் கலந்து கொண்டேன். ஆனால் இந்த
மாநாட்டில் என் மனதில் பொங்கிய மகிழ்வும் உணர்வும் வேறு எந்த
மாநாட்டிலும் நிகழ்ந்ததில்லை. “உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.”


மலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ. இராஜேந்திரன்
கூட்டிய பேராளர் குழுவில் நானும் ஓர் அங்கம்; அந்த சங்கத்தின் துணைத்
தலைவர் என்ற முறையில் துணை ஏற்பாட்டாளரும் கூட. இராஜேந்திரன்ஒரு திறமையான மேலாண்மையுடைய தலைவர். துல்லியமாகத் திட்டமிட்டு இந்தப் பிரயாணத்தை வடிவமைத்திருந்தார். பிரயாணத்துக்கு முன்னமே இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு ஆயத்தப் பயணங்கள் மேற்கொண்டு முதல்வர் கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, வேறு உயர் அலுவலர்கள் பலரையும் சந்தித்து ஏற்பாடுகளைச்
செய்திருந்தார். எங்கள் குழு அண்மையில் ஏர் ஏசியா விமான நிறுவனம்
ஆரம்பித்திருக்கும் குவால லும்பூர் - கொச்சின் விமான வழியைப்
பயன்படுத்திக் கொண்டு, இரண்டு நாட்கள் முன்னதாக வந்து கேரளாவில் ஒரு சிறிய சுற்றுப் பயணத்தையும் செய்துவிட்டுத்தான் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தது.


87 பேர் கொண்ட எங்கள் குழுவைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். இதில் நாங்கள் ஒரு 20 பேர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் பத்திரிக்கையாளர்களாகவும் உள்ளவர்கள். 30 பேர் மலேசியப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி புரிபவர்கள். மீதியுள்ளவர்கள் ஆர்வலர்கள். இவ்வளவு பேர் குழுவில் சேருவார்கள் என இராஜேந்திரனே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுப் பயணத்தில் சேர்த்துக் கொண்டார். உற்சாகமான, இணக்கமான குழு. (எங்களையன்றி மேலும் சுமார் 100 பேர் மலேசியாவிலிருந்து தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வந்திருந்தார்கள்.)


இராஜேந்திரனின் கவனமான ஏற்பாடுகளின் காரணமாக எங்கள் அனைவருக்கும் வசதியான தங்குமிடங்களூம் உணவும் போக்குவரத்தும் கிடைத்தன. எங்கள் குழுவினரைத் தனித்து அடையாளம் காண எங்கள் அனைவருக்கும் மேல் கோட்டு ஒன்றை இராஜேந்திரன் தயாரித்திருந்தார். இதில் மாநாட்டு இலச்சினையோடு “மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டு பேராளர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் கோட்டு மாநாட்டின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக்கிடையில் நுழைந்து செல்ல மிக உதவியாக இருந்தது. எங்கள் குழுவினர் கூட்டத்தில் தொலைந்து போனாலும் பிறகு வந்து சேர்ந்துகொள்ள உதவியாகவும் இருந்தது. தொடக்க விழாவில் எங்களுக்கு உட்காரச் சிறந்த இடத்தையும் அது பிடித்துக்கொடுத்தது. (நண்பர் நா.கண்ணன் எங்களைப் பார்க்க
ஹஜ் யாத்திரிகர்கள் போல இருக்கிறதென்று கூறினார்.)


மக்கள் வெள்ளம் திகைக்க வைப்பதாக இருந்தது. லட்சங்கள் எத்தனை என்று ஊடகங்களைப்பார்த்து தெரிந்து கொண்டோம். ஆனால் நேரில் பார்த்தபோது அடைமழைக்குப் பிறகான காட்டாற்று வெள்ளம் போல் திரண்டிருந்தது. “ஒரு தமிழ் மாநாட்டுக்கா இத்தனை பேர், இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் வந்து திரண்டிருக்கிறார்கள்” என்று எண்ணியபோது தமிழனாக இருப்பதில் நெஞ்சம் விம்மியது. ஏனெனில் இதற்கு முன் இத்தகைய கூட்டங்கள் திருப்பதியிலும்,கும்பமேளாவிலும்தான் திரண்டிருக்க முடியும். இந்திய விடுதலைக் காலங்களில் திரண்டிருக்கலாம். அண்ணாவின் இறப்பு ஊர்வலத்தில் திரண்டிருக்கலாம். ஆனால் தமிழை முன்வைத்து?


பாகம் 2:

நாட்டை மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று பொது அரங்கில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள். திறப்பு விழா, கவியரங்கம்,
பொழிவரங்கம், கலையரங்கம் முதலியவை. இவை பகட்டுக்கள் மிக்கவை. இவைதாம் ஊடகங்களின் – குறிப்பாக தொலைக்காட்சிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தவை. இங்குதான் துதிபாடும் கூட்டமும் அரசியல் ஈக்களும் மொய்த்திருந்தன. துதிகளைத் தாண்டித்தான் இவற்றின் உள்ளடக்கத்துக்குச் செல்லவேண்டும். அயர்வு தரும் செயல். ஆனால் பொறுமையாக சகித்துக்கொண்டிருந்தால் அரிய விருந்துதான்.


இரண்டாவது கண்காட்சிகள்: பண்பாட்டுக் கண்காட்சியும் புத்தகக்
கண்காட்சியும். மிகப் பயனுள்ளவை. உண்மையான தமிழார்வலர்கள் இங்கு
கூடினார்கள். நேரமும் பணமும் செலவிட்டார்கள்.


மூன்றாவதாக ஆய்வரங்கங்கள். இவைதான் மாநாட்டின் உயிர்நாடி. 21 அரங்குகளில் ஒரே நேரத்தில் அமர்வுகள். ஒவ்வோர் அமர்விலும் நான்கு முதல் ஐந்து கட்டுரைகள். ஆகவே 80 முதல் 100 கட்டுரைகள். ஓர் அரங்கத்தில் உட்கார்ந்து ஐந்து கட்டுரைகளைக் கேட்டால் மீதி 75 முதல் 95 கட்டுரைகளைக் கேட்க முடியாது. இதை நீங்கள் ஒரு நாளில் ஐந்து அமர்வுகள், இதைப்போல் நான்கு நாட்கள் என்று கணக்குப் போட்டால் இழப்பு 95 X 5 X 4 என விரியும். பெற்றதை நினைத்துப் பெருமைப்படுவதா, இழந்ததை நினைத்து வருந்துவதா எனத் தெரியவில்லை.


ஏறத்தாழ பத்தாண்டுகள் தமிழாராய்ச்சி பற்றிய மாநாடுகள் நடைபெறாமல் இருந்து இப்போது நடைபெறுவதில் பொங்கி எழுந்த ஆர்வம்தான் இந்தப் பெருக்கம். மேலும் உலகம் முழுவதும் இன்று தமிழ்த் துறைகள் பெருகியுள்ளன. ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ்ப் புழங்குவோர் பெருகியிருக்கிறார்கள். செம்மொழி மாநாட்டு அறிவிப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது.


இவர்களோடு அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் மாநாடு தரும் தமிழ் உணர்வில் தாங்களும் பங்கு பெற விரும்புகிறார்கள். தென்னாப்பிரிக்காவில், மோரிஷியசில், பிஜியில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் தாங்களும் தமிழர்களே என்று ஒன்றிணைந்து அடையாளம் காட்டிக்கொள்ள வந்திருக்கிறார்கள். தமிழர் அல்லாதவரும் தங்கள் தமிழ்ப் பிணைப்பைக் காட்ட வந்திருக்கிறார்கள். ருசியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும், செக் குடியரசிலிருந்தும் வரும் தமிழ்ப்பணியாளர்கள் பலர். யாரை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் புறந்தள்ள முடியும்? ஆகவே அனைவரும் வாருங்கள் என்று கூட்டிய கூட்டத்தில் கட்டுரைகள்
ஆயிரத்துக்கும் மேற்பட்டன.


ஆய்வரங்கம் ஒரு சூப்பர் மார்க்கெட் போல் ஆனது. யாராருக்கு ஏதெது வேண்டுமோ அதது. ஆனால் ஆளுக்குப் பத்து நிமிடம்தான். எல்லாருக்கும் பத்து நிமிடப் புகழ் உண்டு. அரங்கத் தலைவர் “பேமேன்னு” உட்கார்ந்திருந்த இடங்களில் முதல் கட்டுரையாளர் அரை மணி நேரம் கபளீகரம் செய்து கொள்ள கடைசிக் கட்டுரையாளர் இரண்டு மணித் துளிகளில் பாயைச்சுருட்டிக் கொள்ளும் அவலமும் நேர்ந்தது உண்டு.
எனினும் அரங்க ஏற்பாட்டாளர்களை நான் குறை சொல்ல மாட்டேன். பல அனைத்துலக பிரம்மாண்ட மாநாடுகள் இப்படித்தான் நடந்துள்ளன. இதற்கு வேறு மாதிரியான சூத்திரம் ஏதும் இதுவரை இல்லை. மாநாட்டில் பெயர் பதிப்பதே முக்கியம் என்றளவில்தான் எங்கும்.


ஆய்வரங்க நிகழ்வு நிரலைப் பார்த்தால்தான் மாநாட்டின் விரிவும் ஆழமும்
விளங்கும். சில முக்கியமான அமர்வுப் பொருண்மைகளை (இப்படித்தான்


போட்டிருக்கிறார்கள். Theme?)  இங்கே குறிக்கிறேன்.
தமிழும் உலகச் செம்மொழிகளும்; இலக்கணம் (இவற்றில் தொல்காப்பியரே அதிகம் பேசப்பட்டார் எனத் தெரிகிறது); மொழியியல் (யாழ்ப்பாணத் தமிழ்,
சிங்கப்பூர் தமிழ், மலேசியத் தமிழ் எனப் பேசப்பட்டன); திராவிட மொழியியல் (கேரளாவில் சங்க மரபு, Nostratic and mother Tongue studies, கால்டுவெல், Dravidian and Altaic).

தொல்லியல் (அண்மைய தொல்லியல் கண்டுபிடிப்புக்கள், கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கு, பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களும் காசுகளும்); அரசியல்,சமூக, பொருளாதார வரலாறு (அந்தமானும் தமிழர்களும், சோழர் காலம், தொழிலாளர் இயக்கமும் திரு.வி.க.வும்).
சிந்துவெளிப் பண்பாடு (ஐராவதம் மஹாதேவன் உட்பட பல அறிஞர்கள் இதில் பேசினார்கள்); ஒப்பிலக்கியம்; நாட்டுப்புறவியல்; திறனாய்வு; அகராதியியல்; பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்; சுவடியியல்; ஊடகத் தமிழ்; மொழிபெயர்ப்பு; தமிழிசை; தமிழ் மருத்துவம்; அறிவியல் தமிழ்.
மூச்சு முட்டுகிறதல்லவா? இவையெல்லாம் முதல் நாள் முதல் அமர்வில்
பேசப்பட்ட பொருண்மைகள். நிகழ்வு நிரலைப் பார்த்து எழுதினேன். இதனை X 5 X4  என நீங்கள் கணக்கிட்டுக் கொண்டால் ஆய்வரங்கின் பரப்பை ஓரளவு கற்பனைசெய்து கொள்ளலாம்.


நான் ஓர் அரங்கில் பேசினேன். “நவீனத் தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு: மெய்மையும் அறைகூவல்களும்” என்பது தலைப்பு. அரங்கிற்கு என்னையே தலைவராகவும் போட்டிருந்தார்கள். இப்படிப்பல அரங்குகளில் பேச்சாளரே தலைவராகவும் இருந்தார். இது என்ன நியாயம் எனப் புரியவில்லை. எனது அரங்கின் சிறப்பு எனக்குப் பின் பேசிய கலையரசி என்பவரின் பேச்சு. கலையரசி யார்? சீனாவில் வெளிநாட்டு ஒலிபரப்பில் தமிழ்ப் பிரிவின் பணியாளர். சீனர். இயற்பெயர் Chu Juan Hua. தமிழில் கட்டுரை எழுதி கொண்டு வந்திருந்து இனிய, சீன உச்சரிப்புக் கலவையுடன் வாசித்தார். அவரை அரங்கத்தினர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது எனக்கு அப்போதுதான் தெரியும்.


அடுத்த பேச்சு எங்கள் மலேசியரான நசருல்லா கான் என்பவருடையது. (எனக்கு இவரை இதற்கு முன் தெரியாது.) அவருடைய தலைப்பு “ஒலிப்புலனில் தமிழ்ச் செம்மொழி – கணினியில் கனி மொழி – தமிழில் எழுதுங்கள், படியுங்கள், எளிது,
எளிது” என்பது. கொஞ்சம் விற்பனைச் சுலோகம் போலத் தலைப்பு இருந்தாலும் இது அவர் தயார் செய்திருக்கும் தமிழ்க் கற்பிக்கும் மென்பொருள் பற்றியது. தமிழ் தெரியாத எவரும் இந்த மென்பொருள் மூலம் மூன்று, நான்கு மணிநேரத்தில் தமிழைக் கற்றுப் பத்திரிகைகள் வாசிக்கலாம் என்றார். தமிழில் கிரந்த எழுத்துக்களை அகற்ற அவர் சொல்லும் வழி ரோமன் எழுத்துக்களையே பயன்படுத்தி ja, sha, ha என எழுதலாம் என்பது. இதனால் pa, bha, tha, dha போன்ற ஒலிகளையும் சீர்மைப் படுத்தி விடலாம் என்றார். கூட்டம் (நானும் கூட) கொஞ்சம் திகைத்துப் போய் மௌனமாக இருந்தோம். இது பற்றிய கலந்துரையாடல் ஏதும் நடைபெறவில்லை. அரங்கு கலையரசியின் மந்திரத்தில் கட்டுப்பட்டுக்
கிடந்தது.



பாகம் 3 (இறுதி):

 நேரம் கிடைத்த போதெல்லாம் அமர்வுகளுக்குத்தான் நான் போனேன். கவியரங்கம், 
 பொழிவரங்கம், கலையரங்கம், கண்காட்சிகள் எதற்கும் போகவில்லை. 
 இணைய மாநாட்டுக்கு அவ்வப்போது போனேன். அங்கு மகிழ்நன், முத்து நெடுமாறன், 
 கண்ணன், சுபா போன்ற நண்பர்கள் இருந்ததால் மிக மகிழ்ச்சியாக இருந்தது. 
சுபா அங்கு எல்லா மூலைகளிலும் ஜொலித்தார். சொல்லாணாச் சுறுசுறுப்பு.

 கண்ணன் அவருடைய அழகு மகள் ஸ்வேதாவுடன் வந்திருந்தார். அப்பாவின் நிறமும் 
சிரிப்பும் செழுமையான முகமும் வரித்திருந்தார்.


இணைய மாநாட்டை செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்த எடுத்த முடிவு ஒரு 
 stroke of brilliance! (இங்கு மட்டும் ஆங்கிலம் வருகிறது பாருங்கள்; இணைய 
 மாநாட்டில் ஆங்கிலப் புழக்கம் அதிகம் இருந்தது காரணமாக இருக்க வேண்டும்.) 
 நான் சென்ற ஓரிரு அமர்வுகளும் என்னை அதிர வைத்தன; எழுச்சிபெற வைத்தன. 
 தமிழின் எதிர்காலம் இவர்கள் கையில்தான் என்ற உணர்வு வந்தது.


அதற்கேற்றாற்போல் அங்கிருந்த பலரும் இளைஞர்கள். டெக்கீ டைப்! வேகமாக
 நடந்தார்கள். சுருக்கமாகப் பேசினார்கள். தங்கள் உரைகளைக் கணினிக் 
 காட்சிகளாக்கி அசத்தினார்கள். நான் “மிட்டாய்க் கடையை” பார்ப்பது போல் 
 பார்த்து வந்தேன்.
 முத்து அப்போதுதான் அமெரிக்கா போய் வந்திருந்தார். கையோடு ஐபேட் கொண்டு 
 வந்திருந்தார். காப்பி சாப்பிடும் இடத்தில் அவர் அதை எனக்கு டெமோ செய்து 
 காட்ட, ஒரு சிறு கூட்டம் எங்களைச் சுற்றிக் கூடிவிட்டது. முத்து ஐபேடில் 
 தமிழ் மின்னூல் கொண்டுவர அடித்தளம் இட்டிருக்கிறார். பரிசோதனையாக 
 என்னுடைய சிறுகதை ஒன்றை (“என் வயிற்றில் ஓர் எலி”) மின்னூலாக 
இட்டிருக்கிறார். அதனை ஐபேடில் காட்டினார். எல்லாரும் பார்த்து 
வியந்தோம்.


 ஐபேடில் தமிழ்நூல் வந்துவிட்டால் அச்சு நூல் வாங்குவதைக் கைவிட்டு
 விடலாம் போல இருக்கிறது. ஏனென்றால் அதை வைத்துப் படுக்கையில் படுத்துக் 
 கொண்டு படிக்கலாம். மெத்தையில் போட்டுவிட்டு கழிவறை போய்வரலாம். ஏன்? 
 காலையில் கழிவறையில் நாளிதழும் படிக்கலாம். புத்தகம் புரட்டுவது போலவே 
 பக்கங்கள் புரட்டலாம். புக் மார்க் வைக்கலாம். ஒரு கையில் பிடித்துப் 
 பிடிக்கலாம். “கற்செவி எடுத்தாட்டலாம்!” அவ்வளவு லேசாக இருக்கிறது. 
 பேட்டரி சக்தி பத்து மணி நேரமாம்.


அடுத்த யுகம் ஐபேட் யுகம்தான். 
 நான் நம் மின்தமிழ் அன்பர்களில் மாநாட்டில் சந்திக்க நினைத்திருந்த 
 பலரைச் சந்திக்க முடியவில்லை. முக்கியமாக ழான் லுக். ழான் இலானாகிப் 
 போனார். காரணம் விசா பிரச்சினையாம். திவாகரைப் பார்க்க வேண்டும் என்று

 நினைத்திருந்தேன். அவர் என் அரங்கு தேடி வந்து கட்டியணைத்து “வணக்கம்
 சொல்லத்தான் வந்தேன். நேரம் இருந்தால் பிறகு சந்திப்போம்” என்று 
ஓடிப்போனார். சில நொடிகளே ஆனாலும் இனிய நினைவு.


 நா.கணேசன் பார்க்க முடியவில்லை. கணேசன் இதனைப் படிப்பாரானால் வணக்கம். 
விக்கிபீடியா செல்வாவையும் சந்திக்க எண்ணியிருந்தேன். முடியவில்லை. 
 இன்னும் பலர். 
சுகுமாரன், கி.ரா.வைச் சந்திக்க அழைப்பு மின்னஞ்சலில்அனுப்பியிருந்தார். 
ஆனால் மின்னஞ்சலை நான் மலேசியா திரும்பிய பிறகே பார்த்தேன். அன்பின்
 சுகு, மன்னித்துக்கொள்ளுங்கள். எப்படி இருந்தது கி.ரா.சந்திப்பு? நான்

 கி.ரா.வைச் சந்தித்துள்ளேன். புதுச்சேரி தொலைக்காட்சியில் நாங்கள்
 உரையாடியுள்ளோம். அவருக்கு நினைவு இருக்குமோ என்னவோ தெரியாது. 
 செம்மொழி மாநாடு பற்றிய மாற்றுக் கருத்துக்கள் எனக்குத் தெரியும். 
 பலருக்கு அது பற்றிய குறைபாடுகள் உள்ளன. சில நியாயமானவை. ஆனால் ஜெயா டிவி 
இந்தக் குறைபாடுகளை அபத்தமான பாதாளத்துக்குக் கொண்டு போனது.
“பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு, பல்கலைக் கழகங்களைமூடிவிட்டு 
 சாராயக்கடைகளைத் திறந்து வைத்தார்கள்” என அதில் கூறக்கேட்டேன். இப்படித்

 தொடர்பில்லாத விஷயங்களுக்கு முடிச்சுப்போட்டது அவர்கள் அரசியல்
 பொறாமையையே காட்டுகிறது.

ஈழத் தமிழர் இப்படி அவலத்தில் கிடக்கும்போது இந்த மாநாடு அவசியமா? என் 
 எதிர் கேள்வி: ஈழத் தமிழர்களுக்காகக் கவலைப்பட்டு கலைஞர் மாநாடு
 நடத்துவதை விட நடத்தாமல் இருப்பதுதான் சிறப்பா?


 செம்மொழி மாநாட்டினால் என்ன பயன் என்ற கேள்விக்கும் எளிதாகப் பதில் 
 இல்லை. சில காணக்கூடிய நன்மைகள் உண்டு. முதலமைச்சர் அவற்றை 
 அறிவித்துள்ளார். கண்ணால் காணக் கிடைக்காத நன்மைகள் தமிழ் உணர்ச்சியை 
 ஊட்டியதும், அயல்மொழி, அயல்நாட்டாரை தமிழைப் பற்றி அறிந்து கொள்ள 
வைத்ததும். There is definitely a feel good factor.


 இவ்வளவு பணம் விரையம் செய்ய வேண்டுமா? வேறு காரியங்களுக்குப் பயன் 
 படுத்தியிருக்க முடியாதா என்பன rhetorical கேள்விகள். இரண்டு பதில்களும் 
 சொல்லலாம். தாஜ் மஹால் கட்டியதில் என்ன பிரயோஜனம்? படையெடுத்துப் போய் 
 ஆரிய மன்னர்கள் தலையில் கல் ஏற்றியதில் என்ன பிரயோஜனம்? விவேகானந்தர் 
 பாறையில் கோயில் கட்டி என்ன பிரயோஜனம்? மதுரைக் கோயில் கட்டியதற்கு பதில்

 எத்தனை ஏழைகளுக்குச் சோறு போட்டிருக்கலாம்? கேள்விகள், கேள்விகள்!

கலைஞரின் குழுவின் ஏற்பாட்டுத் திறமை அபாரமானது. திட்டமிட்டு எடுத்த 
 பணிகள் முடித்தார்கள். அனைவரும் கனிவாகவும் இணக்கமாகவும் இருந்தார்கள். 
தாரளமான சாப்பாடு, தடையில்லாமல் டீயும் காப்பியும். எங்கணும் சுத்தம் 
 காத்தார்கள். கழிவறைகள் சுமாரான சுத்தத்துடன் இருந்தன. மின் வெட்டு 
 இல்லை; தண்ணீர் தாராளம். எல்லாவற்றுக்கும் மேலாக மாநாட்டைப் பாதுகாப்பாக 
 நடத்தி முடித்தார்கள்.


 ஆகவே மாநாட்டில் பங்கு கொண்டது பெருமைக்குரியதே என்ற முடிவுக்கே
வருகிறேன். மற்றவர்கள் மற்ற மாதிரி நினைப்பதை நாம் தடுக்க முடியாது.





தமிழ் மொழி வாழ்க, வெல்க!

Friday, July 2, 2010

rbala.rbala lit

 Quotes - Too Good to be True