ஒட்டக்கூத்தர்
ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சிமாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர்என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
கவி சக்கரவத்தி..ஒட்டக்கூத்தர்
தொழில் ...கவிஞர்
நாடு ...சோழர்
இயக்கம் ....சைவ சமயம்
குறிப்பிடத்தக்க படைப்பு .. தக்கயாகப் பரணி
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர். கம்பரின்பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக [1] வாழ்ந்த செங்குந்தர் குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன்என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.
இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.[2] இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.
பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.
ஒட்டக்கூத்தரின் நூல்கள்தொகு
காங்கேயன் நாலாயிரக் கோவை
மூவர் உலா
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
ஈட்டியெழுபது
அரும்பைத் தொள்ளாயிரம்
தக்கயாகப் பரணி
எழுப்பெழுபது
நாலாயிரக் கோவை
இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
..........
திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கி.மீ தொலைவில் கூத்தனூர் உள்ளது. வேறெங்கிலும் இல்லாது தமிழகத்தில் மட்டுமே சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இவ்வூரில்தான். மேலும், இங்கு சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோயில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுவோர்க்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்திற்குள் அம்பிகை ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோயிலுக்கென சிறப்பு வரலாறு உண்டு. அந்த வரலாறு வருமாறு: கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை பூசித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக்சின வாகினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிப்பட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். மூன்று சோழ அரசர்களின் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று தக்கையாக பரணி பாடியுள்ளார் கூத்தர்.
சங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொலை செய்ய முயன்றபோது கூத்தனூர் காளி கோயிலினுள் நுழைந்தார். பரணி நூல் ஒன்று பாடினால் அவரை விட்டு விடுவதாக கூறினார் சங்கமர்கள். அதை கேட்டு கூத்தர் பரணி நூல் ஒன்று பாடியதாகவும் அவதூறு பாடுவதற்கு நாவிலிருந்து துணை புரிந்த நாமகளை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று பாடினார் எனவும் வரலாறு உண்டு. கூத்தர் மறைந்துகொண்ட ஊர் வீரர்வாடி என பெயர் பெறும் எனவும் ஆய்வாளர் கூறுகின்றனர்.
வீரர்வாடி கூத்தனூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் ஆற்றின் அக்கரையில் உள்ளது. ஒட்டக்கூத்தர் என பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நடந்திருக்கலாம் என கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதனாலேயே அவர் ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் எழுப்பெழுவது எனப்படும்.
கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணிபலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி என்னும் பெயரில் ஒட்டக்கூத்தர் பாடிய பரணிநூல் ஒன்றும் உண்டு.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை வென்ற திறத்தைப் பாடுகிறது.
ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்ற திறத்தைப் பாடுகிறது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
தொடர்பு
முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் அவன் மகன் விக்கிரமன் தன் தந்தையின் சார்பில் வேங்கி நாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்துவந்தான். அக்காலத்தில் தென்கலிங்க வீமனை வென்றதை ஒட்டக்கூத்தர் பாடிய நூலே முதலாவது கலிங்கத்துப் பரணி.
கருணாகரத் தொண்டைமான் வடகலிங்கத்தை வென்றதைச் செயங்கொண்டார் பாடிய நூல் இரண்டாவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் இயற்றிய பரணி சொல்நயம், பொருள்நயம் மிக்கு விளங்கியமையால் முதல் பரணி வழக்கொழிந்து போயிற்று.
........................
சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், தமிழில் மிகச் சிறந்த புலமை பெற்றவர் .
தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரைச் சிறையிலடைத்து விடுவார்.
அப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது என்னவெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர்.
பதில் தவறாக இருப்பின் இரண்டிரண்டு பேராக நிற்கவைத்து இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்ள அஞ்சுவார்களாம்.
அந்த குலோத்துங்க சோழனுக்குத் தந்தையில்லாததனால் கவி ஒட்டக்கூத்தரே அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பினை ஏற்றார். பாண்டிய மன்னனின் மகளே குலோத்துங்க சோழனுக்குப் பொருத்தமானவள் என்றறிந்து பெண் கேட்கச் சென்றார்.
பாண்டிய மன்னன் இதைக் கேட்டதும், "எங்கள் பாண்டிய நாட்டில் பெண்ணெடுக்க உங்கள் சோழ மன்னனுக்கு என்ன தகுதியிருக்கிறது என ஒட்டக்கூத்தரைப்பார்த்துக் கேட்க, உடனே ஒட்டக்கூத்தர் கீழ்வரும் பாடலைப் பாடினார்.
ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரர்க்குள் வீரனொரரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே
என்ன சொல்கிறாறென்றால்,
"சோழ மன்னர்கள் மார்பில் சூடும் ஆலம்பூ மாலைக்குப் பாண்டிய மன்னர்கள் தரிக்கும் வேப்பம்பூ மாலை ஈடாகுமா?, சோழன் குலம் சூரிய குலம், பாண்டியர்கள் குலம் சந்திரகுலம், சூரியனுக்குச் சந்திரன் ஈடாகுமா?
வீரர்களுள் சிறந்தவன் புலிக்கொடி தரித்த சோழன் தானே மீன்கொடியைத் தரித்த பாண்டியன் இல்லையே? சோழநாட்டின் தலைநகரான அலைகடல் ஆர்ப்பரிக்கும் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் தலைநகரான கொற்கை நகர் ஈடாகுமா?
இப்படி எல்லாவகையிலும் சிறந்த சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமா?" என்று பொருள்படும்படிப் பாடுகிறார் .
இதனை கேட்ட பாண்டிய மன்னனின் அவைப் புலவர் புகழேந்தி நம் பாண்டிய நாட்டைத் தரம் குறைத்து வேறு நாட்டுப் புலவன் பாடுவதா என உணர்ச்சிமேலிட அதற்கு எதிர்ப்பாட்டாக ஒரு பாடல் பாடுகிறார்.
ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்த தம்மானே
ஒப்பரிய திருவிளையாட் டுறந்ததையிலோ அம்மானே
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியி லேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவைபபரந் ததுஞ்சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே அம்மானே
என்று பாடினார்.
பிரித்துப் படிக்க:
ஒருமுனிவன் நேரி யிலோ உரை தெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறந்ததையிலோ அம்மானே
திருநெடுமால் அவதாரஞ் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப் பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவை பரந்ததும் சோழன் பதம் தனையோ அம்மானே
பாண்டியனார் பராக்கிரமம் பகர்வது அரிதே அம்மானே
(கடி : பேய் தாதகி: ஆலம் ; கண்ணி : கொழுந்து )
அதாவது,
"அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையிலா? அல்லது சோழ நாட்டிலுள்ள நேரி மலையிலா?
சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நடந்தது உறந்தையிலா அன்றி கொற்கையிலா?
மஹாவிஷ்ணு மீனாகத்தான் அவதாரம் எடுத்தாரேயன்றிப் புலியாக அல்லவே?
சிவபெருமானின் ஜடாமுடியில் சந்திரனைச் சூடினாரேயன்றிச் சூரியனை இல்லையே ?
புலவர்கள் இயற்றிய நூல்களின் பெருமையை சங்கப்பலகை நீரை எதிர்த்துக் கரைசேர்ந்து உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்ச்சி *(கரை எதிரல்)* வையை ஆற்றில்தான் நடந்தததே அன்றிக் காவிரி ஆற்றிலா?
பேய் பிடித்தவர்களைக் காப்பாற்ற, பேயை விரட்டப் பயன்படுவது வேப்பமரத்தின் இலைதானேயன்றி ஆலிலையா? ஒரு முறை கடல் (பரவை) பாண்டிய மன்னரைப் பணிந்ததாம்,
அது சோழ மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்கலின் பராக்கிரமம் சொல்லற்கரிது" என்பதாகும்
(கரை எதிரல்)
கரை எதிரல் என்பது சங்க காலத்துப் புலவர்களுக்குப் போட்டி நடக்கும். அதில் அவர்கள் தத்தம் கவிதைகளை எழுதி வைகயாற்றில் எல்லோரும் ஓரிடத்தில் குழுமி அந்தக் கவிதைகளை அலைகளில் போடுவார்களாம். அந்த அலையை எதிர்த்து மேலெழுந்து மீண்டுவரும் ஓலைகளே சிறந்த கவிதைகள் கொண்டவையாக அக்கவிதைகளே சிறந்த கவிதை என்று ஏற்றுக்கொள்வார்களாம். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிடும் கவிதைகளெல்லாம் சிறப்பானவை அல்ல என்று கூறி அலைகளில் மீண்டு வந்த புலவர்களின் கவிதைக்குப் பரிசு கொடுத்து அவர்களைச் சிறப்பிப்பார்களாம். இது கரை ஏறல் அல்லது கரை எதிரல் என்றுஅழைப்பர். இது ஒரு திருவிழா போலவே அக்காலஙளில் கொண்டாடப்படுமாம் புலவர்களின் கவித்திறமையைச் சோதிக்க. அதைத்தான் புலவர் புகழேந்தி இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்
இப்படி எதிர்ப்பாட்டுப்பாடி புகழேந்திப் புலவரும் விட்டுக்கொடுக்காமல் தன்நாட்டு பராக்கிரமத்தைப் பாட அதன்பிறகு குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்தது. புகழேந்திப் புலவரைத் தன் மகளுக்குச் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன்.
தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவர் மீது கோபம் கொண்டு அவரை எதிரியாகவே நினைத்துக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தர் அவரை சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.
தன்னாட்டுப் புலவரை சிறையிலடைத்தமை கேட்டு மகாராணி மன்னனிடத்தில் கோபம் கொள்கிறாள். ஒட்டக்கூத்தருக்கு இவ்வளவு அதிகாரமா? அவரை எதிர்த்து ஏன் பேசவில்லை என மன்னன் மீது கோபம் கொண்டு குலோத்துங்கன் அந்தப்புரத்திற்கு வரும்போது தன் அறையின் கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள். அவளைச் சமாதானம் செய்ய புலவர் ஒட்டக்கூத்தனை மன்னன் அனுப்ப அவர் கதவுக்கு அப்புறம் நின்று கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதைக் கேட்ட ராணி இன்னும் கோபமடைந்து இரண்டாவது தாழ்ப்பாளைப் போட்டு விடுகிறார்.
அதனால் தான் "ஒட்டக் கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்"என்ற ஒரு வாசகம் பிரசித்தி பெற்றது.

அருமையான பதிவு! கம்பனைத் தெரிந்த அளவு ஒட்டக்கூத்தர் பற்றித்தெரியவில்லை. இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி!
ReplyDeleteஒட்டகூத்தர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது .பாராட்டுகள்.
ReplyDeleteஅரிய செய்திகள்.
ReplyDeleteமிக நன்று
அருமையா பதிவுகள் .நன்றி
ReplyDelete