Friday, August 14, 2020
"சங்க இலக்கியத்தில் உவமைகள்."
"சங்க இலக்கியத்தில் உவமைகள்."
*இலக்கிய கட்டுரை*
*பேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன்*
*எம்.ஏ.எம்.லிட்.பிஎச்டி*
--------------------------------------------------------------------
*1. சங்க இலக்கிய உவமையும் அதன் வகைகளும்*
1. உவமை என்பது பொருளைத் தக்க ஒப்புமை கொண்டு உணர்த்துவதாகும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் உவமை இயல் என்னும் பகுதியில் உவமையின் இலக்கணத்தைத் தெளிவுபடுத்துகின்றார். அவர் கருத்தின்படி உவமை என்பது பொருளின் தன்மையைப் புலப்படுத்துவது என்பதாகும். வினை, பயன், மெய், உரு ஆகிய பொருளின் தன்மைகளை உவமைகள் சிறப்பிக்கின்றன என்பது அவர் தரும் விளக்கமாகும்.
*வினைபயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத் தோற்றம்*
- தொல். சூ 272
எனத் தொல்காப்பியர் உவமையை வகைப்படுத்திக் காட்டுகின்றார்.
வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கினைப் பண்பு, தொழில், பயன் என மூன்றாக அடக்கிக் காட்டுவர் தண்டியலங்கார நூலாசிரியர்.
*"பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்*
*ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்து ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"*
- தண்டி. சூ. 31
என விளக்கம் தருவர். ஒப்புமை அறிதற்குக் காரணமாய் நிற்கும் பொருளை உவமை என்றும், உவமிக்கப்படும் பொருளைப் பொருள் என்றும் கூறுவர். இவற்றைத் தண்டி உரையாசிரியர் உவமானம் எனவும், உவமேயம் எனவும் குறிப்பிடுவர்.
*"புலி போலப் பாய்ந்தான்'* என்பது வினை *'மாரியன்ன வண்கை'* என்பது பயன்: *துடிபோலும் இடை* என்பது வடிவு: *தளிர்போலும் மேனி* என்பது நிறம். இவ் எடுத்துக் காட்டுகளால் நால்வகை உவமைகள் விளக்கப்படுகின்றன.
*வடிவையும் நிறத்தையும்* பண்பு என்னும் பொதுச் சொல்லால் தண்டி ஆசிரியர் குறிப்பிடுவர்.
2. உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொரு ளாகும்; பொருள் என்பது அவன் காணும் புதிய பொருளாகும். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்திவைத்து அப்பொருளின் உயர்வு தாழ்வுகளை அளந்து அறிவிக்கின்றான் எனக் கூறலாம். பொதுவாகப் பொருளின் சிறப்பை வற்புறுத்தவே உவமை அமைக்கப்படுகிறது. அதன் உயர்வைக் காட்ட அதனினும் உயர்ந்த பொருளையே வரையறையாக அமைக்க வேண்டி யுள்ளது. எனவே உவமை பொருளைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருத்தை ஆசிரியர் தொல்காப்பியனார் வற்புறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
*"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை”*
- தொல், சூ. 274
என்பது அவர் தரும் குறிப்பு ஆகும்.
*'அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்'*
என்ற வழித் துப்புடையன பலவற்றினும் அரிமா உயர்ந்த தாகலின் அஃது உமையாகக் கூறப்பட்டது என்று இளம்பூரணர் காட்டுவர். மற்றும், தாமரை புரையும் காமர் சேவடி என்ற வழிச் சிவப்புடைய பலவற்றினும் தாமரை உயர்ந்ததாதலின் அஃது உவமையாகக் கூறப்பட்டது' என்று மேலும் விளக்கம் தருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment